Friday, 5 October 2012

அறிவு(த்) தீயது

உங்கள் ஆறாம் அறிவை வைத்துக் கொண்டு 
கொஞ்ச காலமேனும் சும்மா இருங்களேன்.

பாஷோ

Each day is a journey and the journey itself home - Basho
முடிவில்லாத காலத்தின் நித்ய பயணிகளே நாட்களும் மாதங்களும். கடந்துபோன வருடங்களும் அப்படியானதே. கடலின் மீது படகில் 
போனாலும், பூமியின் குறுக்காக குதிரையில் கடந்து சென்றாலும் 
காலத்தின் சுமையை நம் மீது ஏற்றிக் கொண்டே பயணிக்கிறோம். நம் மூதாதையர்களில் பலர் வழிப்பயணத்தில் இறந்து போயிருக்கிறார்கள்.


நானும் நீண்ட காலமாகவே காற்றில் அலைவுறும் மேகம் போல 
விருப்பமான பாதையிலே சுற்றியலையும் யாத்திரை செய்யவே விரும்பினேன். ஆனால் கடந்த வசந்தகாலத்தில்தான் கடற்கரை 
வழியாக வீடு திரும்பியிருந்தேன். புது வருடத்தின் முன்பாக சுமிதா 
ஆற்றின் கரையில் இருந்த என் நொய்ந்த வீட்டின் சிலந்தி வலைகளை சுத்தப்படுத்த விரும்பினேன். ஆனால் அதற்குள்ளாகவே மூடுபனி 
துவங்கி வயல் எங்கும் நிரம்பியிருந்தது. அடுத்த பயணத்தை நான் 
அப்போதே கிளம்பினால் மட்டுமே உரிய நேரத்தில் சிரஹவா நுழைவாயிலைக் கடக்க முடியும். கடவுள் என் ஆன்மாவை பற்றிக் கொண்டு என்னைப் புரட்டி போட்டது போன்ற உணர்ச்சியே ஏற்படுகிறது. சாலையின் முடிவற்ற காட்சிகளில் மூழ்கிப்போகாமல் என்னால் வீட்டில் அடைந்து கிடக்க முடியாது. புகழ் பெற்ற ஜென் கவிஞரான பாஷோவின்
Narrow Road to the Interior என்ற நூலிலிருந்து...
(மலைகள் சப்தமிடுவதில்லை - எஸ். ராமகிருஷ்ணன்)

Wednesday, 3 October 2012

அறிவு தீயது

நிழல் மரத்திலொரு காக்கா 
இன்னொரு காக்காவிடம் 
ஆறாவது அறிவு 
மனுசனுக்குத்தான், 
நமக்கெதுக்கு? என்றது.
அங்கு வந்தவன் 
கோடாரியை
மரத்தில் இறக்கினான்.
இப்போது அவை 
செல்போன் டவரில் 
வெயிலில் அமர்ந்திருகின்றன.!

Sunday, 26 August 2012

தெய்வ தரிசனம்...

கூட்ட நெரிசலில் சிக்கி
வரிசையில் வியர்த்து வழிந்து
முன்னங்கால்களாலே எழும்பி
நடந்து பல தலைகள் தாண்டி
ஒரு கற்சிலையை கண்டு
வணங்கி விட்டு வெளியே
இழுத்து விடப்பட்டவுடன்
முகத்தில் வீசிய குளிர்ந்த
காற்று அன்பாக கேட்டது.
கடவுளை கண்டாயா? என்று..
நான் சிரித்து மட்டும் வைத்தேன்.

Saturday, 25 August 2012

காக்காப் பொண்ணு

பழைய தெருக் கூத்தாடிகளும், நடிகர்களும்
பூசிக் கொள்ளும் அரிதாரம் பற்றிய ஒரு சுவையான செய்தி:
கிணறு தூர் வாரும்போதோ அல்லது நீர் நிலைகளின்
ஆழத்திலோ வெள்ளையாக அலுமினியத் தகட்டைப் போல
மினுமினுக்கும் ஒரு வஸ்துவை பார்த்திருக்கிறீர்களா?
கிணறா? அப்படின்னா என்ன? ன்னு கேட்கிறீர்களா?
சரி விடுங்கள். அதன் பெயர் தாளகம் என்று சொல்வார்களாம்.
மாணிக்க வாசகர் அதை "பொற் சுண்ணம்" என்கிறார்.
கிராமங்களில் அதை "காக்காப் பொண்ணு" என்று அழைப்பார்கள்.
அதை எடுத்து இடித்து சுண்ணமாக்கி மேலும் சில பொருள்கள்
சேர்த்து அரிதாரப் பவுடர் செய்து கொள்வார்களாம்.
இன்றைய நிலையோ மிகப் பரிதாபம்.
அவர்கள் வாழ்வும்தான். இப்படிதான் நமது பாரம்பரிய
அடையாளங்களை மெல்ல பதிவிடாமலே காணாமற்
செய்துவிடுகிறோம்.