"பழைய, புதிய கவிஞர்களிடம் நான் சலிப்படைந்து விட்டேன்; அவர்கள் அனைவரும் மேலோட்டமான, ஆழமற்ற கடல்களாக எனக்குத் தெரிகிறார்கள்.
அவர்கள் போதுமான அளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை; எனவே அவர்களுடைய உணர்வுகள், ஆழங்களுக்குள் துல்லியமாகச் செல்லவில்லை.
ஒரு சிறிது கவர்ச்சி, ஒரு சிறிது மனச்சலிப்பு; அவர்களுடைய அனைத்துக் கருத்துகளாலும் விளைந்தது அவ்வளவே.
யாழ் மீட்டிப் பாடிய அவர்களுடைய அனைத்து பாடல்களும், எனக்கு மாயத் தோற்றங்களின் பெருமூச்சுகளாகவும், இருமல்களாகவும் தெரிகின்றன; தொனிகளின் ஆர்வ முனைப்பு பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?
அவர்கள் என்னைப் பொறுத்தவரை சுத்தமாகவும் இல்லை. ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுடைய நீர்நிலைகளை அவை ஆழமானதாகத் தோற்றமளிக்கட்டும் என்று கலக்கிவிடுகிறார்கள்.
அவ்விதம் தங்களைத் தூய்மை செய்பவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், எனக்கு அவர்கள் இடைத்தரகர்களாகவும் குழப்பவாதிகளாகவுமே தெரிகிறார்கள். கேவலமான, தூய்மையற்ற மனிதர்கள்!
ஓ, எனது வலையை அவர்களின் கடலில் வீசி, நல்ல மீன்களைப் பிடிக்கலாம் என்று நம்பி இருந்தேன்; ஆனால், எப்போதும் ஒரு பழைய கடவுளின் தலைதான் வலையில் அகப்பட்டது.
No comments:
Post a Comment