Friday, 1 July 2011

நெடுஞ்சாலைப் பூக்கள்...


ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை படித்ததில் அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னளவில் நான் புரிந்து கொண்டது. உங்களுக்கு புரியுதா ன்னு பாருங்க..!
யாரும் மனதிற்குள்ளேயே திட்டக்கூடாது. ரைட்டு வண்டிய கிளப்புங்கள்..!


"ஒரு நெடுஞ்சாலையின் ஓரம்  ஒரு சின்னஞ் சிறிய பூச்செடி ஒன்று வளர்ந்திருந்தது. அதில் ஒரே ஒரு அழகான மலரும் பூத்திருந்தது.
அது விண்ணை நோக்கி தன் இதழ்களை விரித்திருக்கிறது. தூயதாக ஒளிர்ந்தது. இரவின் இருளிலும், இடி, மின்னலிலும் அது தனித்து வாழ்ந்தது. மழை, வெயில், நிலம், காற்று, என அனைத்தும் சேர்ந்தே அதனை உருவாக்கி இருப்பினும், அந்த மலரில் அவற்றின் சாயல் எதுவுமே இல்லை. ஆனால் அவையே அனைத்து மலர்களின் சாராம்சமாகும். மேலதிகாரம், பொறாமை, அச்சம், தனிமை போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தாலும், அந்த மலரின் அசாதாரணமான தனித்துவத்தையும், எளிமையையும் நாம் பெற முடியாது. மனம் ஒன்றையும் நாடாதபோது தானாக வருவது அது. எதையும் அடையும் இலட்சியமின்றி, முயற்சியுமின்றி விலகும்போதே வாய்ப்பது அது. அதன் பின் அதிலிருந்து எதையும் நீக்கவும் சேர்க்கவும் முடியாதபடி, அதெற்கென ஒரு உயிர்ப்பும் வாழ்வும் அமைந்து  விடுகிறது. இதுவே காலம், வெளி ஆகியவற்றைக்  கடந்த வாழ்வியக்கத்தின் சாரம்".  -  ஜே. கிருஷ்ணமூர்த்தி - நாட்குறிப்பு.



"இயக்கத்தில் உள்ள ஒரு பொருளுக்கு காலம் மெதுவாக நகரும்" என்பது இயற்பியல் விதி. மனதில் எதையும்
நினைக்காமல் (இயக்கத்திலிருந்து விலகுதல் or காலத்திலிருந்து விலகுதல்) ஒரு பொருளை பார்க்க முடிந்தால் அதுவே சரியான பார்வை என்றும் இதை "பரப்பிரம்ம நிலை" என்றும் வேதம் சொல்கிறது. இது எப்படி சாத்தியாமாகும்? உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்...
பிறந்து ஓரிரு வாரங்களே ஆன ஒரு குழந்தையை கவனித்தால் ஒருவேளை இது புரியும். எந்தவித கற்பித்தலும் அனுபவங்களும் பதிப்பிக்கப் படாத நிலையில் உள்ள அக்குழந்தை முதலில் தன் தாயின் ஸ்பரிசங்களை மட்டுமே உணரும். பின்னர் உலகின் புது வெளிச்சத்தை பார்க்க தன் முயற்சி இல்லாமலே பார்க்கவும் கண்களை மூடிக்கொள்ளவும் செய்யும். அதன் கண்களுக்கு வண்ணங்கள் தெரிவதில்லை. ஓசைகள் கூட கேட்பதில்லை. ஐம்புலன்களில் தொடு உணர்வு நிலை மட்டுமே இருக்கிறது. அந்த குழந்தை ஒரு மரத்தை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அது என்ன மரம் என்றோ; அது பச்சை நிறமுள்ளதாய் இருக்கிறது என்றோ; அதற்கு கிளைகள் உண்டு என்பதோ; அது பூமியில் வேர் கொண்டிருக்கிறது என்றோ; மரத்தின் மேல் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்றோ; எறும்பு ஒன்று மரப்பட்டைகளின் ஊடாக ஊர்ந்து செல்கிறது என்றோ; அக்குழந்தை  பார்ப்பதில்லை. ஆனால் பார்க்கும் அவ்வளவுதான். வெறுமனே பார்த்தல் என்பதில்தான் காலம், வெளி யாவும் புலன்களால் உணராமல் உணரப்படுகிறது. இங்கே உணர்தல் என்பது வேறு அர்த்தம் பெறுகிறது. இந்த உணர்தலை x என்று கூட வைத்துக்கொள்ளலாம். மரம், பச்சை வண்ணம், கிளைகள், பூமி, வேர், பறவைகள், எறும்பு, மரப்பட்டை, போன்ற பெயர்ச் சொற்களும், அமர்தல், ஊர்தல் போன்ற வினைச் சொற்களையோ அக்குழந்தை இனிமேல்தான் கற்க வேண்டும். அப்படியென்றால் அக்குழந்தையின் இயக்கம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
இயக்கத்திலிருந்து விலகிய நிலையில் இருக்கிறது. காலம் என்ற நிலைக்குள் வரவில்லை. இதையே நமது சித்தர் பாடலில் "செத்தாரைப் போலத் திரி" என்று சொல்கிறார்கள். மேலும் அக்குழந்தை வளர வளர பெற்றோர்களின் அனுபவங்களையும், தன் புலன் வழி பதிப்பித்த அனுபவங்களையும் பெற்று முழுமையான இயங்கு தன்மைக்குள்  வந்துவிடுகிறது. இன்பமென்றும் துன்பமென்றும் அழுது புலம்புகிறது. "நான்" என்ற தன்மையும் வந்து சேர்கிறது.

மேலும் "மனம்" என்றால் என்ன? மனம் என்பதை புலன் வழி பதிப்பித்த அனுபவங்களின் அல்லது நினைவுகளின் வங்கி என்று அழைக்கலாமா? "மனம் ஒன்றையும் நாடாதபோது தானாக வருவது அது" என்ற வரியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்ல நினைக்கும் வாழ்வியக்கத்தின் சாரம் இதுதான். சரி மரணத்தை நினைத்தால் பயம் வருகிறது ஏன்? அது மரணத்தை பற்றிய பயம் அல்ல; இந்த வாழ்க்கையை நாம் நேசிப்பதனால், ஆசையினால் உண்டாகும் பயம். ஏனென்றால் தெரியாத ஒரு விஷயத்திற்கு எதற்காக பயப்பட வேண்டும் என்கிறார். அந்த சின்னஞ் சிறிய மலர்ச் செடி சொல்லும் சாராம்சமும் இதுதான். இரவின் இருளிலும், இடி, மின்னலிலும் தனித்து வாழும் அந்த சின்னஞ் சிறிய மலர்ச் செடிக்கு மனம் இல்லை; ஆகையால் பயமும் இல்லை; ஏனென்றால் பயம் என்பது ஒரு நினைப்பு நிலை. இயேசு கிறிஸ்து இதையே " குழந்தைகளைப் போல இருங்கள் பரலோக சாம்ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது" என்கிறார்.

இந்தியாவின் பழமையான ஒரு நூலில் ஜனன, மரணத்தை பற்றி ஒரு கதை;
கதைகளும், புராணங்களும் வாழ்வை மேலும் மேலும் நெறிப்படுத்தவே என்பதை பிரித்து புரிந்து கொள்ளுதல் நலம்.

பண்டைய கலாச்சாரம், விதிமுறைகளின்படி ஒரு பிராமணன் ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் தான் சேகரித்த லோகாயத செல்வங்களை எல்லாம் துறந்து, மீண்டும் வாழ்வைத் துவக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராமணனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் தனது தந்தையிடம் சென்று நீங்கள் உங்கள் செல்வத்தை எல்லாம் பலருக்கும் தானம் தருகிறீர்கள். என்னை யாருக்கு அர்பணிக்கப் போகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தந்தை இங்கிருந்து போய்விடு, நான் இப்போது பதிலளிக்க முடியாது என்றார். ஆனால் சிறுவன் பலமுறை திரும்பத் திரும்ப அவர் முன் சென்று அதையே கேட்டதும் தந்தை கோபமுற்று, உன்னை மரணத்திற்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டார். பிராமணன் என்பதால் தனது வார்த்தையை அவரால் மீற முடியவில்லை. அவனை மரணத்திடம் அனுப்பினார். சிறுவன் தனது வழிப் பயணத்தில் பலரைச் சந்திக்கிறான். அவர்களில் சிலர் மறுபிறப்பு உள்ளது என்கின்றனர். சிலர் அதை மறுக்கின்றனர். இது குறித்து விசாரித்தபடியே, இறுதியாக மரணத்தின் வாயிலை அவன் நெருங்குகிறான். அதை அடையும் வேளையில் மரணம் அங்கில்லை.

நீங்கள் இதனை ஆழ்ந்து நோக்கினால், இதன் அற்புதமான உள்ளர்த்தம் புரிபடும். அதாவது மரணத்தை எதிர்க்கொள்ளும்போது அங்கு மரணமில்லை.
மரணம் அங்கு இல்லாததால், சிறுவன் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் மரணம் அவன் முன் தோன்றி, சிறுவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மூன்று நாட்கள் உன்னை காக்க வைத்ததற்காக வருந்துகிறேன். அதற்கீடாக மூன்று வரங்களைத் தருகிறேன். நீ பெரும் சக்கரவர்த்தியாகலாம். பெரும் செல்வங்களை அடையலாம். நிலையான நல்வாழ்வைப் பெறலாம் என்று கூறியது. அவை எனக்கு தேவையில்லை. நான் வரும் வழியில் பலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் மரணம் குறித்து ஒவ்வொரு விதமாய்ப் பதில் உரைத்தனர். எனவே மரணம் குறித்தும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதையும் அறிந்துகொள்ளவே நான் விரும்புகிறேன் என்றான் சிறுவன். இதைத் தவிர வேறு எதையும் விரும்பாத உன் போன்ற மாணவர்கள் கிடைக்க வேண்டும் என்றே நான் பெரிது விரும்பினேன் என்றது மரணம். பின்னர் மரணத்தை பற்றிய உண்மையை விளக்கத் துவங்கி, காலம் என்பதே அற்ற ஒரு வாழ்நிலையை தெளிவுபடுத்தியது.

மீண்டும் வேறொரு கதையில் சிந்திப்போம்....

No comments:

Post a Comment