Tuesday 28 June 2011

நெடுஞ்சாலைக் கவிஞன்...

ஒற்றையடிப் பாதைகள் 
மாட்டு வண்டித் தடங்களாகி
ராஜ பாட்டைகளாக மாறி
தார்ச் சாலைகளாக உருவெடுத்து 
இருவழிச் சாலைகளாக வளர்ந்து
இப்போது நான்கு - பிறகு 
ஆறு வழிச் சாலைகளாகி
எட்டு பதினாறான பின்பும்
நவீன வாகனக் கரையான்கள்
பூமியின் ஓடுகளை உள்ளீடற்ற
புற்றுக்களாய் மாற்றும் போது
மனிதர்கள்
கார்பன்-டை-ஆக்சைடை
சுவாசிக்கும் உயிரினமாக
மாறியிருக்கக் கூடும்!

*****************************

நிகழ்வுகள் கடந்து
முற்றுப் பெறும்
வாழ்க்கை போல்
காட்சிகள் நகர்தலில்
நிலையாமை உணர்த்தும்
கறுப்புக் கம்பளம்!

தூரத்தில்
சூனியத்தை அறிவுறுத்தும்
கானல் நீர்;
ஆம்! ஞானத் தேநீர்!

வளைந்து நெளிந்து 
வீழ்ந்து கிடக்கும்
நீளமான இரவு!

புவியின்
நிலப் பரப்பை
சுற்றி வளைத்த
கலியுக ஆதிசேஷன்!

Sunday 26 June 2011

என் பார்வையில் நாடோடிகள்...





எத்தனையோ ஊர்களுக்கு சென்று வந்திருக்கிறேன். இந்த நாடோடிகள் மட்டும் என் கவனத்தை ஈர்க்கும் படி செய்கிறார்கள். பெரும்பாலான ஊர்களில் இந்த நாடோடிக் கூட்டங்கள் தங்கள் கூடாரங்களை நீர் நிலைகளுக்கு அருகிலோ அல்லது செழுமையான இடங்களிலோ அமைத்து சிறிது காலம் அங்கிருந்து விட்டு பிறகு சென்று விடுகிறார்கள். மீண்டும் ஒரு சில வருடங்கள் கழித்து அதே பகுதிக்கு வருகிறார்கள். ஏதோ ஒருவித சுழற்சி முறையை பின்பற்றுகிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை முறைக்கும் காந்திய பொருளாதார சிந்தனைகளுக்கும்  ஏதோ ஒரு ஒற்றுமை இருப்பது போலவே தோன்றுகிறது. என் பார்வையில் நாடோடிகள்...

நாடோடிகள்; அவர்கள் சுதந்திரப் பறவைகள்! அளவான உடைமைகள் உடையோர். உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஆதி மனிதன் செய்த பயணம் இன்னும் இவர்களுக்குள் முடியவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பயணம்! பயணம் மட்டுமே இவர்களுக்கு வாழ்க்கை.
தேசங்களின் எல்லைகளை தகர்த்த தெய்வங்கள்! எந்த பள்ளிகூடங்களும் கற்றுத் தராத "எளிமையான வாழ்க்கை முறை" ஒன்றை உலகத்தாரின் செவிப்பறைகளில் அறைந்து போதிக்கின்ற கூடாரக் கோவில்கள்!

சிறகுகள் இருந்தால்தான் அது பறவை; பயணம் செய்தால்தான் அவன் மனிதன்! என்பதுதான் இவர்கள் ஓதும் வேதம்! அனைத்து மத / இன திருவிழாக்களிலும் தவறாமல் கலந்து கொள்ளும் சமதர்ம நாடோடிகள்.   பணம் சேமிக்கும் பொருளல்ல; அது தேவைகளை பெறுவதற்கான ஊடகம்.     
என்பதை மிகச் சரியாக புரிந்துகொண்ட பொருளாதார மேதைகள். உலக மகா அழகிகள் என வருணிக்கப்படுபவர்கள் கூட நாடோடி பெண்களின் அருகில் வர அஞ்சுவார்கள். அப்படி ஒரு அழகு! கடவுள் அளித்த பரிசு அது. கூடை முடைதல், பொம்மைகள் செய்தல், பாசிமணிகள் விற்றல் முதலிய தொழில்கள் அவர்களின் கலை சார்ந்தவை அன்றி வேறில்லை! உலகில் மிக உன்னதமான வாழ்வைப் பெற்ற மனிதர் கூட்டம் இந்த நாடோடிக்கூட்டம்தான்! என்பது எனது தாழ்மையான கருத்து. விஞ்ஞானத்தையும் அதன் வளர்ச்சியையும் கூட அறிந்து வைத்திருக்கிறார்கள்! முடிந்த மட்டும் கை வைத்தியம் தான்; முடியாவிட்டால் ஆங்கில மருந்துகளையும் பயன்படுத்துகிறார்கள். போர், தீவிரவாதம், நக்சல்கள் தொல்லை இவை யாவும் இவர்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்கள். அதற்கான தேவையும் இல்லை எனலாம்.
பல மொழிகள் அறிந்து வைத்திருக்கும் வித்தகர்கள். சிறந்த இசை விற்பன்னர்கள். தாய்மை, பாசம், அன்பு எல்லாம் உண்டு. வாழும் கலை என்றோ யோக / தியானக் கலை என்றோ உபதேசங்கள் அன்றி வருத்தங்களை விலக்கி அல்லது மறந்து வாழக் கற்றுக்கொண்ட மேதாவிகள். 
நிச்சயமாக இவர்களில் மன நோயாளிகள் இல்லவே இல்லை எனலாம்.இவர்கள் தங்கள் குழந்தைகளோடு நாய், குரங்கு, கிளி, மைனா, நரி, மற்றும் பாம்புகள் இவற்றையும் வளர்க்கிறார்கள்.
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை.
இவர்கள் காளைகள், குதிரைகள் மற்றும் ஒட்டகங்கள் பூட்டிய 
வண்டிகளையும் ஒரு சிலர்  டி வி எஸ், பஜாஜ் போன்ற இரு சக்கர வாகனங்களையும் van களும் வைத்திருக்கிறார்கள். அந்த van களில் தங்கள் கூடாரங்களையும் குடும்பங்களையும் ஏற்றிக் கொண்டு அடுத்த ஊர்களுக்கு பயணம் கிளம்பிவிடுகிறார்கள். நுகர்வு கலாச்சாரத்தில் திளைத்திருக்கும் நாகரிக மனிதக் கூட்டங்களை விட இந்த நாடோடிக் கூட்டங்கள் உருவாக்கும் குப்பைகள் மிக மிகக் குறைவு. விரைவில் அழிந்து மக்கிப்போககூடியவை. இயற்கை சீரழிவுகள் அற்ற வாழ்க்கை முறை.

இவர்களை பார்த்தாவது உலக மக்கள் எளிமையான வாழ்க்கை முறையை நோக்கி திரும்ப மாட்டார்களா? அடுத்து வரும் இளைய தலைமுறையினர் குடிக்க நல்ல தண்ணீரும் சுவாசிக்க தூயக் காற்றும் பெறச் செய்வார்களா? இவர்களைப் போல ஊர் ஊராக சுற்றவேண்டாம்; அன்றாட வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பொருட்களின் அளவையாவது குறைக்கலாம் அல்லவா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்...
இயற்கை மனிதனுக்கு விதித்த சட்டங்களை விட அவன் தனக்குத் தானே விதித்து கொண்ட சட்டங்கள்தான் அதிகம்.
 
லம்பாடிகள், போபாக்கள்( ராஜஸ்த்தான்), பொஹிமியன், செர்பிய நாடோடிகள், டோம்பாக்கள், கல்பெலியா, குஜ்ஜார்கள் மற்றும் நரிக் குறவர்கள் என்று பலவாறு அழைக்கப்பட்டாலும் எல்லோரும் நாடோடிக் கூட்டங்களே...! இவர்கள் இந்தியாவிலிருந்துதான் உலகின் பல பகுதிகளுக்கு சென்றார்கள் என்ற கருத்து வரலாற்றாசிரியர்களால் நம்பப்படுகிறது. பெரும்பாலும் இவர்களுடைய வாழ்க்கை நிகழ் காலத்திலேயே கவனம் செலுத்துவதாகவே இருக்கிறது.


நாடோடிகள் மழை, வெயில் மற்றும் குளிர் காலங்களை கணக்கில் கொண்டும்
தட்ப வெப்ப நிலைகள் மற்றும் பருவகாலங்கள் பற்றிய விழிப்புணர்வோடும்
தங்களுடைய பயண காலத்தை தேர்வு செய்கிறார்கள். 




Thursday 23 June 2011

வாடகை வீட்டுவாசிகள்

ஒவ்வொரு தடவை
வீடு மாறிச் செல்லும் போதும்
தட்டு முட்டு சாமான்களோடு
சொந்த வீடு வாங்கும் கனவையும்
தூக்கிக் கொண்டு செல்கிறோம்.

அப்பாவின் ஹெர்குலிஸ் சைக்கிளும்
இரு கோணி பைகளில் அடங்கிவிடும்
சமையல் பாத்திரங்களும்
அம்மாவுக்கு சீதனமாக வந்த
ஒரு மர பீரோவிற்குள்
சில முறை தைக்கப் பட்டும்
பல முறை துவைக்கப் பட்டும்
அந்துருண்டை வாசத்தில்
வாசம் செய்யும் எங்களது
சட்டை டவுசர்களும் தான்
புது வீட்டிற்குள் எங்களோடு வரும்
மொத்த உடைமைகள்!

ஒவ்வொரு குடியேற்றத்தின் போதும்
பழைய துணிமணிகளின் உட்பொதிவில்
பொலிவுப் பெறும் புதிய தலையணைகள்!

அவரவர் பொருள்களை
அவரவர் தூக்கிச் சுமந்தே
வீட்டை நிறைத்துவிட்டு
மறுநாள் பால் காய்ச்சி 
அண்டை வீடுகளோடு
புதிய உறவு கொண்டாடும்
நாங்கள்
அகதிகளின் லட்சணங்களையும்
நாடோடிகளின் கூறுகளையும்
ஒருங்கே பெற்ற
வாடகை வீட்டு வாசிகள்!

நாங்கள் வசித்த வீடுகள்
அதே கதைகளைத்தான் திரும்பவும்
கேட்டுக்கொண்டிருக்கிறதாம்...!
சொந்தவீடு வாங்கும் கனவுகளை
புதிய மனிதர்களின் சொல்லாடலில்.

என் ஜன்னலின் வழியே...!


காற்று வரட்டும்! என்று
ஜன்னல் கதவுகளைத்
திறந்து வைக்கிறேன் - பிறகு
சக மனிதர்களின்
எண்ணப் புழுதி
உட்புகுவது கண்டு
அடைத்தும் வைக்கிறேன்.

திறப்பதும்
அடைப்பதுமான
இந்நிகழ்வில்....
பெரும்பாலான கவிதைகள்
ஜன்னல் கதவுகளின்
இடுக்குகளில்
சிதைந்தும்
சிற்சில சமயங்களில்
முழுமையாகவும் பிரசவிக்கின்றது.

வாழ்க்கை நீரோட்டத்தில்
மூக்கு பிடித்து தம் கட்டுகிறேன்.
எப்போதெல்லாம்
மூச்சு முட்டுகிறதோ
அப்போதெல்லாம்
வெளி வர தவிப்பது போல
ஜன்னல் கதவுகளை
திறந்து வைக்கிறேன்


ஒரு
கனத்த மழையில்
ஜன்னல் திரைச்சீலைகள்
கண்ணீர் வடித்துகொண்டிருக்கின்றன.
குளிர்ந்த காற்று
எனக்குள் வீசிகொண்டிருக்கிறது.

மனிதர்கள்
ஜன்னல் கைதிகள்.
சில பேர்
திறந்தே வைக்கிறார்கள்.
சில பேர்
அடைத்தே வைக்கிறார்கள்.
பகுத்தறிவுவாதிகள்
உடைத்து எறிகிறார்கள்.
ஞானிகளோ
வெளியேறி விடுகிறார்கள்.

நான் வெறுமனே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
என் ஜன்னலின் வழியே...!

சித்திரைத் திருவிழா...


ஆவலுடன் பார்த்துகொண்டிருக்கிறேன்.
உள்ளூர் தொலைக் காட்சியில்
மீனாட்சி திருக்கல்யாணம்.
அவளும் பார்த்துக்கொண்டிருக்கலாம்...!

மாசி வீதிகளில் தேரோட்டமாம்.
அவளோ நின்று கொண்டிருக்கிறாள்.
பிறகு எப்படி?

மொத்த ஊர் சனங்களும் வடம் இழுக்க...
மொய்குழல் மெல்ல நடந்து வருகிறாள்.
ஒன்று நகர்கிறது.
மற்றொன்று நடக்கிறது.

கள்ளழகருக்கு
எதிர்சேவை செய்ய
பொதியம் நோக்கி
மக்களும் - அவள் 
எதிர்முகம் காண 
நானும் திரிந்து
கொண்டேயிருக்கிறோம்...!

இறுதியில் எனக்கான ஒரு
சிறு புன்னகையில் அவளும்
வைகையாற்றில் அழகரும்
ஒரு சேர எழுந்தருளினார்கள்...!