Monday 22 June 2020

இரண்டு குட்டி நாய்கள்...

அச்சமில்லாதவனுக்கு ஒரு சாவு; அஞ்சிப் பிழைப்பவனுக்கு தினம் தினம் சாவு என்பார்கள். "வீரம் என்றால் என்ன தெரியுமா? பயப்படாதது மாதிரி நடிக்கிறது" என்று ஒரு திரைப்படத்தில் கமல் ஒரு வசனம் பேசுவார். கவிஞர் வைரமுத்து "அச்சம் என்பது ஒரு நினைப்பு நிலை" என்பார். நான்கு மாடிக் கட்டத்திலிருந்து கீழே பார்த்தாலே நமக்கு தலை சுற்றுகிறது. ஆனால் மலைமுகடுகளிலும், பாறை உச்சிகளிலும் உயரங்களைப் பற்றிய அச்சமின்றி உலவும் வெள்ளாடுகளை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. அச்ச உணர்வைப் பற்றி சிக்மென்ட் பிராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களின் கட்டுரைகளை படித்திருக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் மாதிரி அச்சம் என்கிற உணர்வைப் பற்றி சிந்தித்தால் வீரம் என்கிற ஒரு உணர்வைப் பற்றியும் யோசிக்கத்தான் வேண்டும். அச்சம் என்பது என்ன? அச்சம் என்பது எல்லா உயிரினங்களுக்கும் உள்ள ஒரு உணர்வு நிலை. அச்சம் ஏன் வருகிறது. நமக்கு பிடித்தமானவற்றை இழக்க நேரிடும்போது அச்சம் தோன்றுகிறது. மற்றொரு வகையில் யோசித்தால் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை ஆதாரங்களை தக்க வைத்து கொள்வதில் ஏற்படும் ஒரு முன்னெச்சரிக்கை உணர்வு என்றும் சொல்லலாம்.
"அச்சத்தின்போதும், துன்பத்தின்போதும் அமைதியாக இருக்கக் கற்றுகொள்வது எப்படி? "
என்பதுதான் முக்கியமான சாராம்சம்.

மனோதிடம் என்பதுதான் வீரம் என்று நமது முன்னோர்கள் பன்னெடுங்காலமாகவே சொல்லி வந்திருக்கிறார்கள். அதுக்கு உதாரணமாக நான் கண்ட, நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒருநாள் மாலை எனது நண்பனைப் பார்க்க சென்று கொண்டிருந்தேன். அவனது வீட்டிற்கு ஒரு ரயில்வே கிராசிங்கை கடந்துதான்  செல்லவேண்டும். அன்றைய பொழுது நான் அவன் வீட்டிற்கு செல்லும்போது அந்த ரயில்வே கிராசிங்கில் கதவை அடைத்துவிட்டார்கள். நான் எனது டூவீலரை நிறுத்திவிட்டு காத்துக் கொண்டிருந்தேன். பள்ளி வாகனங்கள், ஆட்டோக்கள், டூவீலர்கள் என அனைத்தும் புடை சூழ அந்த கேட்டிற்கு அருகில் நின்றிருந்தன. குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வந்த பெற்றோர்களும், காய்கறி விற்பவர்களும், பெண்களும், சில கல கல இளைஞர்களும், நடுத்தர வயதினர்களும் மற்ற வாகனங்களில் வந்தவர்களும் என்னைப் போலவே காத்துக் கொண்டிருந்தார்கள். தனியாக வந்தவர்கள் அமைதியாக எதையோ நினைத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி நினைக்காமல் இருந்தவர்கள்  செல்போன்களிலும், தன்னுடன் வந்தவர்களோடும் எதையோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலபேர் தங்களை எல்லோரும் பார்ப்பதாக பாவித்துக் கொண்டு எதையாவது செய்து கொண்டும் இருந்தார்கள்.

அப்போது எங்கிருந்தோ வந்த செவலை (BROWN) நிற நாய் ஒன்று தண்டவாளத்திற்கு நடுவே எதையோ முகர்ந்து பார்த்துக்கொண்டும், அதை கடித்து இழுக்க முயற்சி செய்தபடியும் நின்று கொண்டிருந்தது. தூரத்தில் ட்ரெயின் வரும் ஓசையும், ஹார்ன் சத்தமும் வேகமாக நெருங்கி வந்து கொண்டிருந்தது. சிலபேர்  அந்த நாயை ச்சூ ச்சூ என்று சத்தமிட்டு விரட்டி விட முயற்சித்தார்கள். அந்த நாய் தனக்கான உணவை? எப்படியாவது கவர்ந்துவிட வேண்டுமென்றுதான் போராடியதே தவிர அருகில் ஆபத்து நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி அது பார்க்கவேயில்லை.

இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் தண்டவாளத்தின் நடுவே ஒரு ஐம்பது மீட்டர் தொலைவில் ட்ரெயின் எந்த திசையில் வருகிறதோ அதற்கு நேர் எதிர்திசையில் இரண்டு குட்டி நாய்கள் துள்ளி குதித்து விளையாடியபடியே ஓடிக் கொண்டிருந்தன. அந்த குட்டிகளுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. அவ்வளவு மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தது. எல்லோரும் இந்த பெரிய நாயை கவனித்தது போலவே அந்த சின்னஞ் சிறிய குட்டி நாய்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இப்போது ட்ரெயின் மிகவும் அருகில் வந்துவிட்டது. அங்கிருந்த கேட் கீப்பர் ஒரு கல்லை எடுத்து அந்த நாயின் மீது எறிந்தார். குறி தவறிப் போனது. பின்னர் ஹோய்..ஹோய்..என்று கத்தினார். கடைசியில் "செத்தால் சாகட்டும்" என்றார். திடீரென்று யாரோ ஒருவர் வேகமாய்ச் சென்று கீழே கிடந்த கல்லைப் பொறுக்கி அந்த பெரிய நாயின் மீது விட்டெறிந்தார். அது 23 ம் புலிகேசியின் அம்பைப் போல் வேறு திசையில் சென்று விழுந்தது. அது அந்த இடத்த விட்டு நகருவதாய் இல்லை. வாகனங்களில் காத்துக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் சில பேருக்கு அந்த நாயை துரத்திவிட வேண்டுமே என்ற துடிப்பும், சில பேருக்கு என்ன நடக்கப் போகிறது என்கிற ஆர்வமும், சில பேருக்கு பயமும் நிழலாடியது. இன்னும் சில பேரோ முகத்தை வேறு பக்கமும் திருப்பிக் கொண்டார்கள். தாய்மார்கள் தங்கள் குழந்தைகளின் கண்களை கைகளால் மூடினார்கள். குழந்தைகள் வெடுக்கென்று எடுத்து விட்டார்கள்.

கடைசி நொடியில் அந்த நாய் தப்பிவிடும் என்றே எனக்கு தோன்றியது. ஆனால்
மின்னெலென ட்ரெயின் செவலை நாய்க்கு அருகில் வர ஆரம்பித்ததும், அவ்வளவு நேரம் நகராமல் அடம் பிடித்த நாய் இப்போது மிரண்டு போய் ட்ரெயின் போகும் திசையிலேயே தலை தெறிக்க ஓட்டமெடுத்தது. ட்ரெயின் போகும் வேகத்தால் நாங்கள் நின்றிருந்த இடம் தடக் தடக்கென்று மண்ணோடு அதிர்ந்து புழுதி கிளம்பியது. தன்னால் இயன்ற அளவுக்கு அந்த ஜீவன் ஓடியது. தண்டவாளங்களுக்கு நடுவில் உள்ள சிமென்ட் பலகைகளில் தடுமாறி விழுந்து எழுந்து ஓடியது. இதற்கு மேல் ஓடமுடியாது என்ற நிலையில் அந்த நாய் அப்படியே தண்டவாளத்தை விட்டு வெளியே தாவியது. ஆனால் அந்தோ பரிதாபம்... சரியாக ஓரிரு நொடிகளில் ட்ரெயின் சக்கரங்களுக்கு ஊடாக தண்டவாளத்திற்கு வெளியே தாவும் முயற்சியில் இடையில் கொடூரமாக சிக்கிக் கொண்டது. அதற்கு சத்தமிட கூட நேரமில்லை. தண்டவாளத்திற்கும், சக்கரத்திற்கும் நடுவில் உடல் நசுங்க தொடங்கியது. ரயில்வே கிராசிங் மனிதர்களின் முகங்களில் அப்படியே அதிர்ச்சி வழிந்தோடியது. ட்ரெயின் தன்னுடைய கடைசி பெட்டியையும் இழுத்துக் கொண்டு சிறிது வெப்பக் காற்றை வீசிவிட்டு சென்றுவிட்டது.

அடடே..;அந்த குட்டி நாய்களுக்கு என்னாயிற்று? அந்த ராட்சத ட்ரெயினுக்கு கீழே இருந்து அந்த சின்னஞ் சிறிய குட்டிகள் தப்பித்தனவா? ஆம்.... தப்பித்தே விட்டன. ஆபத்து நெருங்கிவிட்டதை அறிந்ததும் அவைகள் அப்படியே அமைதியாக ஒன்றோடு ஒன்று சுருண்டு படுத்தவாறு ஒரு சிறு சமாதி நிலைக்கு சென்றன. ட்ரெயின் சென்றவுடன் வழக்கம்போல இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன. அது மட்டுமல்ல மீண்டும் விளையாடவே ஆரம்பித்துவிட்டன. அங்கிருந்த மனிதர்கள் அனைவரும் அந்த குட்டி நாய்களை ஆச்சர்யமாய் பார்த்தார்கள்; ஆனால் அவற்றிடமிருந்து எதையும் அவர்கள் கற்றுக் கொள்ளாமலே..? மீண்டும் அவசர அவசரமாக அந்த இடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தார்கள். "கற்றுக் கொள்கிற எண்ணம் உள்ளவருக்கு இந்த உலகமே பல்கலை கழகமாக மாறுகிறது என்பது மட்டும் உண்மை".