Thursday 21 July 2011

நார்த்தா மலை / சித்தன்னவாசல்

சில மாதங்களுக்கு முன் நானும் எனது நண்பனும் இரண்டுச்சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள நார்த்தா மலை, சித்தன்ன வாசல் போன்ற இடங்களுக்கு சென்று வந்தோம். அடிக்கடி நாங்கள் இவ்வாறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றுவருவதுன்டு. உங்களின் பயணத்தின்போது இந்த பகிர்வு பயனுள்ளதாக இருக்கலாம்.


Kadambar hill
நார்த்தா மலை:
சிலு சிலுவென வீசும் 
குளிர் காற்றில் சரியாக  காலை ஐந்து  
மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டோம். ஊருக்கு வெளியே வந்து ஒரு சிறிய  கடையில் தேநீர் அருந்தி விட்டு சுறுசுறுப்பை ஏற்றிக்கொண்டு கிளம்பினோம். 




பார்த்துகொண்டிருக்கும்போதே பொழுது மெல்ல விடியத் தொடங்கியது.
மேலூர் நான்கு வழிச் சாலையிலிருந்து பிரிந்து திருப்பத்தூர் சாலையை பிடித்தோம். சாலையில் இருமருங்கிலும் மரங்கள் இருப்பது ஒரு தனி அழகுதான். மருது சகோதரர்களை தூக்கிலிட்ட இடமான திருப்பத்தூர், சேதுபதி மன்னரின் கோட்டையான திருமயம் ஆகிய வரலாற்று சின்னங்களைக் கடந்து புதுக்கோட்டையை அடைந்தோம். புதுக்கோட்டையில் ஒரு சிறிய மெஸ்ஸில் இருவரும் காலை சிற்றுண்டியை முடித்துகொண்டோம். வயிற்றைக் கெடுக்காத உணவு. பின்னர் அங்கிருந்து கிளம்பி திருச்சி செல்லும் நெடுஞ் சாலையில் கீரனூருக்கும், புதுக்கோட்டைக்கும் இடையில் உள்ள பொம்மிடிமலை எனும் சிற்றூரிலிருந்து இடப் பக்கமாக திரும்பி மூன்று கிலோ மீட்டர்கள் சென்று நார்த்தா மலையை அடைந்தோம்.


இருபுறமும் ஆலவிருட்சங்கள்
நம்மை வரவேற்கின்றன. இங்கு கற்களும், பாறைகளும் நிறைந்த மலைகள் அதிகமாக காணப்படுகின்றன. தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டுவதற்கு நார்த்தா மலையிலிருந்துதான் கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற செய்தியை அறிந்தோம். இங்கு கடம்பர் மலைக் கோயிலும் (குடைவரை), விஜயாலய சோழன் கோயிலும் இந்திய தொல்பொருள் ஆணையத்தின் (ASI) பார்வையில் பாதுகாக்கபடுகின்றன. "சோழநாடு சோறுடைத்து" என்பார்கள். ஆனால் "சோழநாடு கல்லுடைத்து" என்றாலும் தகும். எப்படித்தான் கற்களை இங்கிருந்து தஞ்சை வரை கொண்டு சென்றார்களோ தெரியவில்லை. பெரிய பெரிய உருள் கட்டைகளை மாற்றி மாற்றி வைத்தும், யானைகளையும், காளைகளையும் பயன்படுத்தி கற்களை கொண்டு சென்றார்கள் என அறிந்தோம். தற்போது உள்ள கிரேன், பொக்லைன் போன்ற இயந்திரங்கள் இல்லாமல் வெறும் மனித ஆற்றலையும் விலங்குகளையும் மட்டுமே நம்பி எவ்வளவு பெரிய கோயிலை (தஞ்சை) எழுப்பியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று நினைத்தபோது ஒரு நிமிடம் சிலிர்த்துப் போய்விட்டேன். எனக்கு 10000 BC Mummy போன்ற ஹாலிவுட் திரைப்படங்கள் நினைவிற்குள் வந்து சென்றன.

Vijayaalaya sozhan Temple

கிராமத்தை அடைந்தவுடன் வலதுபுறமாகத் திரும்பி வடதிசையில் 500 மீட்டர் சென்றால் கடம்பர் மலையை அடையலாம். இங்கு கடம்ப நாயனாரும், மங்களாம்பிகை தாயாரும் காட்சி தருகின்றனர். ஒரு சிறிய குளமும் அருகில் இருக்கிறது.





Forest Road
கிராமத்தின் தென் பகுதி வனச்சரகத்திற்கு உட்பட்ட காடுகளாய் இருக்கிறது. மேல்மலை என்கிற விஜயாலய சோழன் கோயில் மலைக்கு மேல் உள்ளது. அக்காடுகள் வழியாகச் சென்றும் மேல்மலைக்கு செல்லலாம். கிராமத்தின் மேற்குப் பக்கமாக சென்று அன்னவாசல் சாலையிலிருந்தும் சுலபமாக மேல்மலைக்கு செல்லலாம்.  

காட்டு பாதை வழியாக செல்லும்போது குளம் ஒன்று எதிர்கொள்கிறது. இங்கு பதினெண் பூமி விண்ணகரம் என்கிற குடைவரை கோயிலும், விஜயாலய சோழன் கோயிலும் உள்ளது.







சித்தன்னவாசல்:  
 நார்த்தா மலையிலிருந்து புறப்பட்டு கிராமவழிச் சாலைகளின் வழியாக சித்தன்னவாசலுக்கு எங்களது பயணத்தை ஆரம்பித்தோம்.அறுவடை முடிந்த வயல் வெளிகளில் மேயும் மாடுகள், துள்ளி குறுக்கே ஓடும் ஆடுகள், புல்லுக் கட்டு சுமந்து செல்லும் பெண்கள், மாட்டுவண்டிகள், ட்ராக்டர்கள், என கிராமத்து வாசனைகளுடன் எங்கள் பைக் சீறிப் பாய்ந்து சென்றது. அடுத்த அரை மணி நேரத்தில் அன்னவாசலை அடைந்து வண்டியை நிறுத்தினோம். அங்கு ஒரு சிறிய உணவு விடுதியில் சுடச் சுட அன்னம் (சாப்பாடு) எங்களுக்கு பரிமாறப்பட்டது. ஒரு பிடி பிடித்துவிட்டு சித்தன்னவாசலை அடைந்து ஒரு மர நிழலில் ஓய்வெடுத்தோம். இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் நெடுஞ்சாலையில் 14 வது கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் சித்தன்னவாசல் அன்னவாசலிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. மலையடிவாரத்துக்குச் செல்லும் வழியில் நிறைய ஆலமரங்கள் படர்ந்திருப்பது  கொள்ளை அழகு.


குரங்குகள் அங்கும் இங்கும் தாவித் திரிகின்றன. இங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஓரளவு வருகிறார்கள். நாங்கள் சென்றிருந்தபோது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள்
பேருந்துகளில் நிறைய பேர் வந்திருந்தார்கள். பின்னர் இவற்றை ரசித்தபடியே அடிவாரத்திலிருந்து பாறைகளில் வெட்டப்பட்ட படிகளில் குடைவரைக்கு ஏறிச் சென்றோம். ஜேசுதாஸ் பாடிய தமிழ் திரைப்பட பாடல் ஒன்று நினைவுக்கு வந்தது. மனது அதைப் பாடியபடி இருந்தது.


"சொர்கத்தின் வாசற்படி; எண்ணக் கனவுகளில்!
பெண்ணல்ல நீயெனக்கு; வண்ணக் களஞ்சியமே!" - என்ற பாடலில்

"சித்தன்னவாசலின் ஓவியமே; சிந்தைக்குள் ஊறிய காவியமே!"
என்ற வரிகள் நினைவுக்குள் வந்து சென்றன.

முகப்பில் நான்கு தூண்கள் இருக்கின்றன. இதுவும் ஒரு குடைவரைக் கோயில்தான். அங்கு ஒரு கர்ப்பகிரஹமும் (sanctum), அர்த்தமண்டபமும் உள்ளன. உள்ளே சென்றோம். தியான நிலையில் அமர்திருக்கும் சிலைகள் ஒரு வித மன அமைதியை ஏற்படுத்தியது. இந்த சிலைகள் சமண தீர்த்தங்கரர்களாக இருக்ககூடும். ஒரு காலத்தில் அர்த்தமண்டபம்
முழுவதும் ஓவியங்களால் நிறைந்திருந்த கூரையிலும் சுவரிலும்
தற்போது சில ஓவியங்களை மட்டுமே காணமுடிகிறது.
மீதியெல்லாம் அழிக்கப்பட்டுவிட்டதை அறிந்து மிக்க வேதனை
அடைந்தோம்.

ஒரு தாமரை குளத்தில் அன்னப்பறவைகள் 
நீந்துவது போலவும், மீன்கள், 
மலர் பறிக்கும் இளம் பெண்கள், மாடுகள் போன்ற உருவங்கள், நடனம், முத்திரைகள் மற்றும் முகபாவங்களும் மிக நேர்த்தியாகவும் தத்ரூபமாகவும் வரையபபட்டிருக்கின்றன. சமண மதத்தின் புகழ் பெற்ற முக்கியமான இடங்களில் சித்தன்னவாசல் மிகப்பழமை வாய்ந்த இடம். அஜந்தா ஓவியங்களுக்கு இணையான ஓவியங்கள் இங்கு மிகவும் பிரசித்திபெற்றது. இந்த இடம் பாண்டியர்களின் ஓவியக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அங்குள்ள மண்குதிரைகள் உள்ள  கிராமக் கோயிலின் அருகில் செயற்கை புல்வெளிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். ஒரு தாமரைக் குளமும் அதனருகில் இருக்கிறது. பின்னர் அங்கிருந்து சமண முனிகளின் படுகைக்கு சென்றோம்.


இது மலைக்கு மேலே உள்ள இயற்கையாக அமைந்த பாறை இடுக்கில் அமைந்திருப்பது வியப்பூட்டும் சிறப்பு.        
தமிழ் மொழி வளர்ச்சியில் சமணர்களின் பங்கு மிகவும் வியக்கத்தக்க வகையில் இருக்கிறது. அந்திக் கருக்கலாவதற்கு முன்பே மதுரை நகரை நெருங்கி விட வேண்டுமென்று நாங்கள் திட்டமிட்டிருந்தபடியால் சித்தன்ன வாசலிலிருந்து வண்டியைக் கிளப்பினோம்.
மீண்டும் இதுபோன்ற ஒரு பகிர்வில் சந்திப்போம்.

Tuesday 12 July 2011

கவிஞர்கள் குறித்து...(நீட்ஷே)

"பழைய, புதிய கவிஞர்களிடம் நான் சலிப்படைந்து விட்டேன்; அவர்கள் அனைவரும் மேலோட்டமான, ஆழமற்ற கடல்களாக எனக்குத் தெரிகிறார்கள்.

அவர்கள் போதுமான அளவு ஆழமாகச் சிந்திக்கவில்லை; எனவே அவர்களுடைய உணர்வுகள், ஆழங்களுக்குள் துல்லியமாகச் செல்லவில்லை.

ஒரு சிறிது கவர்ச்சி, ஒரு சிறிது மனச்சலிப்பு; அவர்களுடைய அனைத்துக் கருத்துகளாலும் விளைந்தது அவ்வளவே.

யாழ் மீட்டிப் பாடிய அவர்களுடைய அனைத்து பாடல்களும், எனக்கு மாயத் தோற்றங்களின் பெருமூச்சுகளாகவும், இருமல்களாகவும் தெரிகின்றன; தொனிகளின் ஆர்வ முனைப்பு பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்?

அவர்கள் என்னைப் பொறுத்தவரை சுத்தமாகவும் இல்லை. ஆனால், அவர்கள் அனைவரும் தங்களுடைய நீர்நிலைகளை அவை ஆழமானதாகத் தோற்றமளிக்கட்டும் என்று கலக்கிவிடுகிறார்கள்.

அவ்விதம் தங்களைத் தூய்மை செய்பவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், எனக்கு அவர்கள் இடைத்தரகர்களாகவும் குழப்பவாதிகளாகவுமே தெரிகிறார்கள். கேவலமான, தூய்மையற்ற மனிதர்கள்!

ஓ, எனது வலையை அவர்களின் கடலில் வீசி, நல்ல மீன்களைப் பிடிக்கலாம் என்று நம்பி இருந்தேன்; ஆனால், எப்போதும் ஒரு பழைய கடவுளின் தலைதான் வலையில் அகப்பட்டது.

Saturday 2 July 2011

காதற் செடி

அன்னையை கண்ட
பிள்ளைகள் போல..
என்னுடைய 
கவிதைகளுக்கான
உவமைகள் கூட
உன்னைத் தேடியே
ஓடிவருகின்றன

காதலின்
வலி அதிகமாவது
அது மறுக்கப்படும்போது அல்ல
புரிய வைக்க இயலாதபோது..!

எனக்காக நீ
என்பதல்ல காதல்;
உனக்காக நான்
என்பதே காதல்!

இருவருக்குமான
சுயமரியாதை
மதிக்கப்படும்வரை
காதற் செடி
ஜீவனுள்ளதாய் இருக்கும்.

Friday 1 July 2011

நெடுஞ்சாலைப் பூக்கள்...


ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களை படித்ததில் அவர் என்ன சொல்கிறார் என்பதை என்னளவில் நான் புரிந்து கொண்டது. உங்களுக்கு புரியுதா ன்னு பாருங்க..!
யாரும் மனதிற்குள்ளேயே திட்டக்கூடாது. ரைட்டு வண்டிய கிளப்புங்கள்..!


"ஒரு நெடுஞ்சாலையின் ஓரம்  ஒரு சின்னஞ் சிறிய பூச்செடி ஒன்று வளர்ந்திருந்தது. அதில் ஒரே ஒரு அழகான மலரும் பூத்திருந்தது.
அது விண்ணை நோக்கி தன் இதழ்களை விரித்திருக்கிறது. தூயதாக ஒளிர்ந்தது. இரவின் இருளிலும், இடி, மின்னலிலும் அது தனித்து வாழ்ந்தது. மழை, வெயில், நிலம், காற்று, என அனைத்தும் சேர்ந்தே அதனை உருவாக்கி இருப்பினும், அந்த மலரில் அவற்றின் சாயல் எதுவுமே இல்லை. ஆனால் அவையே அனைத்து மலர்களின் சாராம்சமாகும். மேலதிகாரம், பொறாமை, அச்சம், தனிமை போன்ற அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்தாலும், அந்த மலரின் அசாதாரணமான தனித்துவத்தையும், எளிமையையும் நாம் பெற முடியாது. மனம் ஒன்றையும் நாடாதபோது தானாக வருவது அது. எதையும் அடையும் இலட்சியமின்றி, முயற்சியுமின்றி விலகும்போதே வாய்ப்பது அது. அதன் பின் அதிலிருந்து எதையும் நீக்கவும் சேர்க்கவும் முடியாதபடி, அதெற்கென ஒரு உயிர்ப்பும் வாழ்வும் அமைந்து  விடுகிறது. இதுவே காலம், வெளி ஆகியவற்றைக்  கடந்த வாழ்வியக்கத்தின் சாரம்".  -  ஜே. கிருஷ்ணமூர்த்தி - நாட்குறிப்பு.



"இயக்கத்தில் உள்ள ஒரு பொருளுக்கு காலம் மெதுவாக நகரும்" என்பது இயற்பியல் விதி. மனதில் எதையும்
நினைக்காமல் (இயக்கத்திலிருந்து விலகுதல் or காலத்திலிருந்து விலகுதல்) ஒரு பொருளை பார்க்க முடிந்தால் அதுவே சரியான பார்வை என்றும் இதை "பரப்பிரம்ம நிலை" என்றும் வேதம் சொல்கிறது. இது எப்படி சாத்தியாமாகும்? உதாரணமாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்...
பிறந்து ஓரிரு வாரங்களே ஆன ஒரு குழந்தையை கவனித்தால் ஒருவேளை இது புரியும். எந்தவித கற்பித்தலும் அனுபவங்களும் பதிப்பிக்கப் படாத நிலையில் உள்ள அக்குழந்தை முதலில் தன் தாயின் ஸ்பரிசங்களை மட்டுமே உணரும். பின்னர் உலகின் புது வெளிச்சத்தை பார்க்க தன் முயற்சி இல்லாமலே பார்க்கவும் கண்களை மூடிக்கொள்ளவும் செய்யும். அதன் கண்களுக்கு வண்ணங்கள் தெரிவதில்லை. ஓசைகள் கூட கேட்பதில்லை. ஐம்புலன்களில் தொடு உணர்வு நிலை மட்டுமே இருக்கிறது. அந்த குழந்தை ஒரு மரத்தை பார்ப்பதாக வைத்துக் கொள்வோம். அது என்ன மரம் என்றோ; அது பச்சை நிறமுள்ளதாய் இருக்கிறது என்றோ; அதற்கு கிளைகள் உண்டு என்பதோ; அது பூமியில் வேர் கொண்டிருக்கிறது என்றோ; மரத்தின் மேல் பறவைகள் அமர்ந்திருக்கின்றன என்றோ; எறும்பு ஒன்று மரப்பட்டைகளின் ஊடாக ஊர்ந்து செல்கிறது என்றோ; அக்குழந்தை  பார்ப்பதில்லை. ஆனால் பார்க்கும் அவ்வளவுதான். வெறுமனே பார்த்தல் என்பதில்தான் காலம், வெளி யாவும் புலன்களால் உணராமல் உணரப்படுகிறது. இங்கே உணர்தல் என்பது வேறு அர்த்தம் பெறுகிறது. இந்த உணர்தலை x என்று கூட வைத்துக்கொள்ளலாம். மரம், பச்சை வண்ணம், கிளைகள், பூமி, வேர், பறவைகள், எறும்பு, மரப்பட்டை, போன்ற பெயர்ச் சொற்களும், அமர்தல், ஊர்தல் போன்ற வினைச் சொற்களையோ அக்குழந்தை இனிமேல்தான் கற்க வேண்டும். அப்படியென்றால் அக்குழந்தையின் இயக்கம் இன்னும் ஆரம்பிக்கவில்லை.
இயக்கத்திலிருந்து விலகிய நிலையில் இருக்கிறது. காலம் என்ற நிலைக்குள் வரவில்லை. இதையே நமது சித்தர் பாடலில் "செத்தாரைப் போலத் திரி" என்று சொல்கிறார்கள். மேலும் அக்குழந்தை வளர வளர பெற்றோர்களின் அனுபவங்களையும், தன் புலன் வழி பதிப்பித்த அனுபவங்களையும் பெற்று முழுமையான இயங்கு தன்மைக்குள்  வந்துவிடுகிறது. இன்பமென்றும் துன்பமென்றும் அழுது புலம்புகிறது. "நான்" என்ற தன்மையும் வந்து சேர்கிறது.

மேலும் "மனம்" என்றால் என்ன? மனம் என்பதை புலன் வழி பதிப்பித்த அனுபவங்களின் அல்லது நினைவுகளின் வங்கி என்று அழைக்கலாமா? "மனம் ஒன்றையும் நாடாதபோது தானாக வருவது அது" என்ற வரியில் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொல்ல நினைக்கும் வாழ்வியக்கத்தின் சாரம் இதுதான். சரி மரணத்தை நினைத்தால் பயம் வருகிறது ஏன்? அது மரணத்தை பற்றிய பயம் அல்ல; இந்த வாழ்க்கையை நாம் நேசிப்பதனால், ஆசையினால் உண்டாகும் பயம். ஏனென்றால் தெரியாத ஒரு விஷயத்திற்கு எதற்காக பயப்பட வேண்டும் என்கிறார். அந்த சின்னஞ் சிறிய மலர்ச் செடி சொல்லும் சாராம்சமும் இதுதான். இரவின் இருளிலும், இடி, மின்னலிலும் தனித்து வாழும் அந்த சின்னஞ் சிறிய மலர்ச் செடிக்கு மனம் இல்லை; ஆகையால் பயமும் இல்லை; ஏனென்றால் பயம் என்பது ஒரு நினைப்பு நிலை. இயேசு கிறிஸ்து இதையே " குழந்தைகளைப் போல இருங்கள் பரலோக சாம்ராஜ்யம் சமீபத்தில் இருக்கிறது" என்கிறார்.

இந்தியாவின் பழமையான ஒரு நூலில் ஜனன, மரணத்தை பற்றி ஒரு கதை;
கதைகளும், புராணங்களும் வாழ்வை மேலும் மேலும் நெறிப்படுத்தவே என்பதை பிரித்து புரிந்து கொள்ளுதல் நலம்.

பண்டைய கலாச்சாரம், விதிமுறைகளின்படி ஒரு பிராமணன் ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் தான் சேகரித்த லோகாயத செல்வங்களை எல்லாம் துறந்து, மீண்டும் வாழ்வைத் துவக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட பிராமணனுக்கு மகன் ஒருவன் இருந்தான். அவன் தனது தந்தையிடம் சென்று நீங்கள் உங்கள் செல்வத்தை எல்லாம் பலருக்கும் தானம் தருகிறீர்கள். என்னை யாருக்கு அர்பணிக்கப் போகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு தந்தை இங்கிருந்து போய்விடு, நான் இப்போது பதிலளிக்க முடியாது என்றார். ஆனால் சிறுவன் பலமுறை திரும்பத் திரும்ப அவர் முன் சென்று அதையே கேட்டதும் தந்தை கோபமுற்று, உன்னை மரணத்திற்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்று கூறிவிட்டார். பிராமணன் என்பதால் தனது வார்த்தையை அவரால் மீற முடியவில்லை. அவனை மரணத்திடம் அனுப்பினார். சிறுவன் தனது வழிப் பயணத்தில் பலரைச் சந்திக்கிறான். அவர்களில் சிலர் மறுபிறப்பு உள்ளது என்கின்றனர். சிலர் அதை மறுக்கின்றனர். இது குறித்து விசாரித்தபடியே, இறுதியாக மரணத்தின் வாயிலை அவன் நெருங்குகிறான். அதை அடையும் வேளையில் மரணம் அங்கில்லை.

நீங்கள் இதனை ஆழ்ந்து நோக்கினால், இதன் அற்புதமான உள்ளர்த்தம் புரிபடும். அதாவது மரணத்தை எதிர்க்கொள்ளும்போது அங்கு மரணமில்லை.
மரணம் அங்கு இல்லாததால், சிறுவன் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. நான்காம் நாள் மரணம் அவன் முன் தோன்றி, சிறுவனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. மூன்று நாட்கள் உன்னை காக்க வைத்ததற்காக வருந்துகிறேன். அதற்கீடாக மூன்று வரங்களைத் தருகிறேன். நீ பெரும் சக்கரவர்த்தியாகலாம். பெரும் செல்வங்களை அடையலாம். நிலையான நல்வாழ்வைப் பெறலாம் என்று கூறியது. அவை எனக்கு தேவையில்லை. நான் வரும் வழியில் பலரைச் சந்தித்தேன். அவர்கள் அனைவரும் மரணம் குறித்து ஒவ்வொரு விதமாய்ப் பதில் உரைத்தனர். எனவே மரணம் குறித்தும் அதன் பின்னர் என்ன நடக்கும் என்பதையும் அறிந்துகொள்ளவே நான் விரும்புகிறேன் என்றான் சிறுவன். இதைத் தவிர வேறு எதையும் விரும்பாத உன் போன்ற மாணவர்கள் கிடைக்க வேண்டும் என்றே நான் பெரிது விரும்பினேன் என்றது மரணம். பின்னர் மரணத்தை பற்றிய உண்மையை விளக்கத் துவங்கி, காலம் என்பதே அற்ற ஒரு வாழ்நிலையை தெளிவுபடுத்தியது.

மீண்டும் வேறொரு கதையில் சிந்திப்போம்....